Take a fresh look at your lifestyle.

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு

20

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளன. மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வந்த புற நோயாளிகள் தவிப்போடு காத்திருக்கின்றனர்.

நேற்றைய தினம் சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய கலைஞர் பல்ளியின் மகனாக இருக்கக்கூடிய விக்னேஷ் என்பவர் அவரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது‌. கத்திக்குத்துக்கு உள்ளான மருத்துவர் அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைக்குள்ளேயே ஒரு மருத்துவர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவ சங்கம் கூட்டமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தது. மருத்துவர் யாரும் பணிக்கு வரவில்லை என்பதால் பொதுவான சிகிச்சைக்கு வந்துள்ள புறநோயாளிகள் அனைவரும் வழங்கப்பட்டுள்ள அனுமதிச் சீட்டுடன் காலை எட்டு மணி முதல் தற்போது வரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அதனை பெருக்கும் விதமாக மருத்துவமனைக்குள் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தி வைப்பது, காவலர்கள் தொடர்ந்து பணியில் இருப்பது, லைசன்ஸ் கன் வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தவிர உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லேசான தூறல் மழை பெய்து வரும் நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் அவர்கள் கோஷமிட்டு முழக்கம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் காலை 10 மணி வரை பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தலைவலி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற காரணங்களுக்காக வந்துள்ள புற நோயாளிகள், அங்குள்ள சிகிச்சை பிரிவு இயங்காததால் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அவசர சிகிச்சை பிரிவும் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவும் மட்டும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைக்க எண்ணி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வருகின்றனர்.

திருவாரூர், புதுக்கோட்டை  அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெளியூர் மட்டும் தொலைதூரத்தில் இருந்து வந்துள்ள நோயாளிகளும், வயதானவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

திருவள்ளூர், ராணிபேட்டை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் வளாகத்தினூள் போராட்டம் நடைபெற்று வருகிறது.