நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தைக் காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா படமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யூ.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாலிவுட் பிரபலங்களான பாபி தியோல் மற்றும் திசா படானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பத்தாயிரம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு என மொத்தம் எட்டு மொழிகளில் ‘கங்குவா’ படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பொருட்செலவிலும், பலதரப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் மற்ற மாநிலங்களில் எல்லாம் காலை 4:00 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் காட்சிகள் காலை 9 மணிக்குத் தான் திரையிட தொடங்கியுள்ளது. படத்தைக் காண விடியற்காலையே திரையரங்குக்கு வந்துள்ள ரசிகர்கள் வைக்கப்பட்டிருக்கும் சூர்யாவின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கட்-அவுட்டின் முன் நடனம் ஆடுவது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கொண்டாடி வருகிருன்றனர்.