Take a fresh look at your lifestyle.

காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு

54

 

இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர் துறைமுகத்தின் 25-ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், நடிகை ஆண்ட்ரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது காமராஜர் துறைமுகம் குறித்த விளக்க புத்தகம் ஆன காபி டேபிள் புக் என்ற புத்தகத்தை அமைச்சர் சோனோவால் வெளியிட்டார். காமராஜர் துறைமுகத்தின் பாரம்பரியம், மாஸ்டர் பிளான் 2047 நிலையான வளர்ச்சிப் பாதையை எடுத்துக் காட்டும் திட்டங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து ரூ 520 கோடி மதிப்பீட்டிலான நான்காம் கட்ட மூலதன அகழாய்வு (தூர்வாறும்) திட்டம், ரூ.37 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கடல் நீரின் உப்பை நீக்கி சுத்திகரித்து பயன்படுத்தும் புதிய ஆலை, ரூ‌ 25 கோடி செலவில் துறைமுகத்திற்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று தமிழ் இலக்கியத்தில் உண்டு. அதன் அடிப்படையில் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படுவதாக கூறினார். மேலும், சென்னை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் முதல்வர் கலைஞர் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து சென்னையின் வடக்கே துறைமுகம் அமைக்க தேவையான அத்தனையும் நாங்கள் செய்கிறோம் என்ற அடிப்படையில் நிலத்தையும் கையகப்படுத்தி கொடுத்து திட்டத்தை நிறைவேற்றினார். 2001ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பிரதமர் வாஜ்பாய் மூலமாக தமிழ்நாட்டிலே இந்த துறைமுகத்தை திறந்து வைத்தார். இந்த துறைமுகம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி முதல் கொல்கத்தா சாலை, பெங்களூர் சாலை, திருச்சி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய அனைத்தையும்  இணைக்கும் பெரிய ரிங் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது என்றால் இதற்கு முழுக்க காரணம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால், “உலகளவில் இந்தியா கடல்வழி போக்குவரத்தில் பெரும் வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. அண்மையில் உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை முன்னேற்றத்தை கண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் அனைத்து துறைகளிலும் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். இந்த காமராஜர் துறைமுகம் பொன்விழா ஆண்டில் மேலும் பல வளர்ச்சிகளை அடையும்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநர் ஐரின் சிந்தியா, சென்னை துறைமுக துனைத் தலைவர் விஸ்வநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் வள்ளலார் மற்றும் காமராஜர் துறைமுக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.