ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதைத்தொடர்ந்து, கூலி படத்தின் மீது ரஜினிகாந்த்தும், அவரது ரசிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இப்படியான நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவரோ, ‘எப்போ.. ஓ மை காட்.. சாரி’ என்று சொல்லிவிட்டு சென்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ரஜினிக்கு இந்த விஷயம்கூடவா தெரியாது. ஒரு ஆறுதல்கூடவா சொல்லமாட்டார் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ரஜினி ஸ்டைலிலும் படம் முழுமையாக இல்லை; ஞானவேல் ஸ்டைலிலும் படம் முழுமையாக இல்லை என்று ரசிகர்கள் கூறினார்கள். இதனையடுத்து அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருகிறது.
லோகேஷ் இதற்கு முன்னதாக இயக்கிய லியோ திரைப்படம் எதிர்மறை விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் லோகேஷ். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோன்ற ஒரு ஹிட்டை ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஆசை. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் கூடுதல் பொறுப்பையும், பிரஷரையும் உணர்ந்து வருகிறார்.
கூலி படத்தில் மும்முரமாக நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இணைந்த தளபதி படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மணிரத்னம் தவிர்த்து நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கிறார் ரஜினி. இதன் ப்ரோமோ வீடியோ ஷூட் சில நாட்களுக்கு முன்புதான் நடந்ததாகவும்; வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.