கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவ குழுவும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.
இது தவிர மருத்துவர் பாலாஜியும் படுக்கையில் இருந்தவாரே தான் நலமுடன் இருப்பதாக பேசியிருக்கும் வீடியோவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசியிருக்கும் அவர், ” எனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையினால் நான் நலமுடன் இருக்கிறேன். காலை உணவை என்னால் சாப்பிட முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும், நான் ஓய்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளே உள்ளன. அந்தக் காலகட்டத்திலும் கலைஞர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்ய அனுமதித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மருத்துவர் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் டாக்டர்களுக்கு அவர் நன்றி கூறுகிறார்.