சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன .
சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். இதுதவிர நட்டி நட்ராஜ், கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
1070 மற்றும் 2024 என இரண்டு வெவ்வேறு நூற்றாண்டில் கதை நகர்வதாக காட்டப்படுகிறது. தற்போதைய நூற்றாண்டை சேர்ந்த பிரான்சிஸ் ஒரு பவுன்ட்டி ஹன்டர். 1070ல் இருக்கும் சூர்யா ஒரு பழங்குடியின போர்வீரன். அவரைக் காட்டும் போது மட்டும் தூய தமிழில் விவரிக்கிறார்கள்.
நிகழ்கால காட்சிகளில் வரும் சூர்யா பிரான்சிஸ் என்கிற கதாபாத்திரத்திலும், வரலாற்று காட்சிகளில் வரும் சூர்யா, கங்குவா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். 1070ல் இருந்த 5 கிராமங்களை பற்றி காட்டுகிறார்கள். எந்த தொடர்பும் இல்லாமல் கோவாவில் நடக்கும் பார்ட்டியில் இருந்து பழங்கால கிராமத்தில் நடக்கும் போருக்கு படம் செல்கிறது.
சண்டை காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. 1070ல் இருக்கும் பெண்கள் எதிரிகளை தாக்குவது, பாம்புகள், தேள்கள் கொண்ட காட்சிகள் தனித்து தெரிகிறது. 3டியில் பாரக்கும்போது நாமே போர்க்களத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது. கங்குவாவில் தெளிவு இல்லாவிட்டாலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரமாண்டமாக இருக்கிறது.
1070ஐ காட்டும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். போரை அறிவித்த பிறகு சில காரணங்களுக்காக சூர்யாவை கிராமத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அதன் பிறகு சூர்யாவும், சிறுவனும் மீண்டும் சந்திக்கிறார்கள். சூர்யா, சிறுவன் இடையேயான பிணைப்பு தான் படத்தின் மையம். ஆனால் நம்மால் அதை முழுவதுமாக உணர முடியவில்லை. இரண்டு வித்தியாசமான காலகட்டங்களை சேர்ந்தவராக அற்புதமாக நடித்திருக்கிறார் சூர்யா.
படத்தின் ஆரம்ப காட்சிகள் கிரிஞ்ச் ஆக உள்ளது. பின்னர் வரும் வரலாற்று காட்சிகள் இண்டர்வெல் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இரண்டாம் பாதி பொறுமையை சோதித்தது. அழுத்தமான காட்சி இல்லாதது படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நிறைய விஷயங்களை கிளிம்ப்ஸாக காட்டியிருக்கிறார் சிவா. பழங்காலத்து சூர்யாவின் கிராமத்தில் இருக்கும் சடங்குகள், அவர்களின் ஆயுதங்கள், போருக்கு போகும் முன்பு பிரார்த்தனை செய்யும்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றை அழகாக காட்டியிருக்கிறார்கள். எதிரி கிராமத்தின் தலைவனான வில்லன் பாபி தியோலுக்கு நான்கு மகன்கள். அவர்களை தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை.
கடந்த காலத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் நன்றாக இருக்கிறது. பேசாமல் ஒரேயொரு நூற்றாண்டை மட்டும் காட்டியிருக்கலாம். ஏகப்பட்ட விஷயங்களை காட்டுவதில் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர்.