கிண்டி கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணரான மருத்துவர் திரு.பாலாஜியை பெருங்களத்துரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் குற்றச் செயல்பாடுகளை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
26 வயதான விக்னேஷ் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்துள்ளார். தாய் பிரேமா மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் பிரேமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லாரி ஓட்டுனரான விக்னேஷின் தந்தை கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு மரணமடைந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயை பொறுப்பான மகனாக இருந்து கவனித்து வந்திருக்கிறார் விக்னேஷ். அவருக்கும் இதயத்தில் பிரச்சனை இருந்திருக்கிறது.
அதே கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தான் அவரும் தனக்கான சிகிச்சையை பெற்று வந்திருக்கிறார்.
ஒரு நாள் மாத்திரை போடவில்லை என்றாலும் விக்னேஷை வலிப்பு தாக்கிவிடும் அளவுக்கு அவருக்கு அபாயம் இருக்கிறது என்று அவரது குடும்பத்தாரால் கூறப்படுகிறது. அந்த இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தாலும் அவர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் அவருக்கு கூறியுள்ளனர்.
மேலும் கூடுவாஞ்சேரிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஆறு ஏழு மாதங்களாக வீட்டில் இருந்தபடியே புற்றுநோய் தாக்கப்பட்டு இருக்கும் தனது தாயை இரவு பகலாக பத்திரமாக பார்த்துக் கொண்டதாக விக்னேஷின் தம்பி லோகேஷ் ஊடகத்தினரிடம் கூறியிருக்கிறார்.
இரண்டாம் நிலை புற்றுநோய் தாக்கப்பட்டு இருக்கும் தனது தாயை முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பார்த்துள்ளார். சிகிச்சை செய்ய மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்படும் என்று தனியார் மருத்துவமனையில் கூறப்பட்டதால் அவர்களின் அறிவுரைப்படி தனது தாயை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார் விக்னேஷ். அவருக்கு அங்கு ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேமாவின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். நுரையீரலுக்கான சிறப்பு சிகிச்சை ஓமந்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தான் அளிக்கப்பட்டு வருகிறது என்று விக்னேஷிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக விக்னேஷ் தனது தாயை அழைத்துக் கொண்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனை வரை சென்று இருக்கிறார். அந்த இடத்தில் அவர்கள் முறையாக நடத்தப்படவில்லை. பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய இன்னல்களுக்கு பிறகு அந்த மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்கள் அனைத்தும் விக்னேஷ் தன் தாயின் அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டும், வெளியேறும் உடல் கழிவுகளை அள்ளிப் போட்டுக் கொண்டும் இருந்துள்ளார்.
இருந்தும் அவருக்கு பெரிய அளவில் உடல்நிலை தேறிய பாடு இல்லை. அதன் பிறகு விக்னேஷின் குடும்பத்தினர் தனியார் துறையில் இருக்கும் வரை நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஒருவரை அணுகி பிரேமாவின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்ததில் தான் ஒரு திடுக்கிடும் விஷயம் விக்னேஷுக்கு தெரிய வந்துள்ளது. பிரேமாவுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையால் நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதோடு சேர்த்து சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தனியார் தரப்பு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
தற்போது பிரேமா சந்தித்துக் கொண்டிருக்கும் கூடுதல் உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்கப்படாதது தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறகு தன் தாயான பிரேமாவை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இதற்கிடையே மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனது தாய் பிரேமாவை அனுமதித்துள்ளார்.
ஏற்பட்டிருக்கும் நிலைமையால் அவர் சிறிது நாட்களில் இறந்து விடுவார் என்று கூறியதை கேட்டு விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டு அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். கையில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை அணுகி மருத்துவர் பாலாஜியை சந்தித்து பேசியுள்ளனர் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்.
தனியார் மருத்துவமனையின் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் பாலாஜி அதைப் பார்த்த மாத்திரத்தில் விசிறி அடித்துள்ளார். 25 ஆண்டுகளாக தான் மருத்துவத்துறையில் இருப்பதாகவும், அந்த ரிப்போர்ட் முட்டாள்தனமாக இருப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார். நியாயம் கேட்டு சென்ற விக்னேஷை அவர் சரியாக நடத்தவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தனது தாயின் உடல் நிலையை குறித்து சரியான விவரங்களை மருத்துவர் பாலாஜி உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என்ற எரிச்சலும், தனது தாய் மரண வாயிலை தொட்டுவிடுவாரோ என்ற கவலையும் விக்னேஷை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இதன் காரணமாக நேற்றைய தினம் விக்னேஷ் நேரடியாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் பாலாஜியை சந்தித்து தனது கையில் இருந்த கத்தியால் அவரை ஒரு சில இடங்களில் வெட்டினார். எந்த ஒரு பதட்டமும், சலசலப்புமின்றி அவர் மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த பொதுமக்களும், செக்யூரிட்டிகளும் விக்னேஷை சுற்றி வளைத்து பிடித்து தாக்கினர். பிறகு அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து விக்னேஷின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது, ” அவன் கத்தியை எடுத்து மருத்துவரை தாக்கியது தவறுதான். தனது தாய்க்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே என்னும் வருத்தம் மேலோங்கி தான் அவன் அப்படி நடந்து இருக்க கூடும். மற்றபடி அவன் தவறான நபர் இல்லை. இன்னொருவரை தாக்கி கொலை செய்யும் அளவுக்கு மனிதாபிமானம் அற்றவன் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.
ஆகையால், நடந்திருக்கும் இந்த சம்பவத்தை தனிமனித பிரச்சனையாக பார்க்காமல் சமூக பிரச்சனையாக கையாளுவதே அரசாங்கம் மக்களுக்கு செய்யும் கடமை.