சென்ற மாதம் நடந்த தவெக கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் தற்போது தளபதி69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தளபதி69 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆஃபீசர்ஸ் அகாடெமியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ஐ அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தி எச். வினோத் இயக்குகிறார். அதில் பூஜா ஹெக்டே தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஹிந்தி நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த வருட அக்டோபரில் வெளியாக உள்ளதாக படக்குழுவில் கூறப்பட்துள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக இந்தப் படம் இருக்கும் என்று தாராளமாக எதிர்பாகக்கலாம்.
ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இடம் தான் ஆஃபீஸர்ஸ் ட்ரைனிங் அகாடமி. படத்தின் சூட்டிங் இந்த இடத்தில் நடந்து வருகிறது என்பதால் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம் பெறலாம் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
ட்ரெயினிங்கில் ஈடுபட்டிருக்கும் ராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்துடன் விஜய்யை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைக்கு இணங்க சூட்டிங்கிற்கு இடையில் விஜய் அனைவரையும் நேரில் சந்திக்கச் சென்றார். அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் கைகுலுக்கி தன்னுடைய மகிழ்ச்சியை விஜய் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர்களுடன் இணைந்து பல புகைப்படங்களையும் செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சின்ன சின்ன குழந்தைகளுடன் விஜய் தன்னுடைய பெருமளவு நேரத்தை செலவழித்தார்.
2012-இல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் விஜய் ஒரு ராணுவ வீரராக நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் அந்த படம் மிகப்பெரிய ஹிட் படமாக வலம் வந்திருந்தது. ரசிகர்களின் ஃபேவரைட் படமாக துப்பாக்கி படம் இப்போதும் அமைந்திருக்கிறது.
ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பம் குழந்தை என அனைவரையும் பிரிந்து வெயில் மழை என எதையும் பாராமல் நாட்டை காக்க போராடுவதையெல்லாம் இதுவரை பல படங்கள் காட்சிப்படுத்தியுள்ளது .
சமீபத்தில் வெளியான அமரன் படத்திலும் ராணுவ வீரரின் உணர்வு ரீதியான போராட்டங்களை நம்மால் காண முடிந்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களுடைய வாழ்வை தியாகம் செய்ய துணியும் வீரர்களுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டதை நெகிழ்ச்சியாக உணர்ந்துள்ளார் விஜய்.