தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் ஃபெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு இந்த இடைக்கால நிவாரணம் அவசரமாக தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், சூறாவளியின் கடுமையான பாதிப்பை எடுத்துரைத்துள்ளார். கடந்த சில தினங்களாக பெய்த கனமழை மற்றும் வீசிய சூறாவளி காற்று பெரும்பாலான வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புயல் மழைக்கு 12 உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், 6.9 மில்லியன் மக்கள் (1.5 கோடி பேர்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
211,139 ஹெக்டேர் விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்களை சூறாவளிக் காற்று மூழ்கடித்தது. 1,649 கிலோமீட்டர் மின் கடத்திகள், 23,664 மின் கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகளை அழித்துள்ளது. மேலும், 9,576 கிலோமீட்டர் சாலைகள், 1,847 மதகுகள் மற்றும் 417 தொட்டிகள் இந்த மழை மற்றும் புயலால் சேதமடைந்துள்ளன.
விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இவையனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பருவத்திற்கு பெய்யவேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் பல இடங்களில் உள்ள விளை நிலங்களையும், கட்டடங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
மாநில அரசு ஏற்கனவே நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தற்காலிக சீரமைப்பு முயற்சிகளுக்கு 2,475 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் பிரதமரிடம் தெரிவித்தார். இந்த பேரழிவு தமிழ்நாட்டில் உள்ள வளங்களை பெருமளவு சிதைத்துள்ளது. எனவே மத்திய அரசின் உடனடி நிதி உதவி தேவை என்று அவர் வலியுறுத்தினார். சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு மத்திய அரசின் சார்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர்.