தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காலை நிலவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 880 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும்.
எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்பு உபகரணங்கள், சிறப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றுடன் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25-இல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 26-இல் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 27-இல் வெளிப்புறம் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 28-இல் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை செய்ய வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 29-ஆ ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்துவரும் 5 தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.