இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்னய்யா அர்த்தம்! எது பெருசுன்னு அடிச்சு காட்டு என்று வடிவேலு சொல்வதைப் போல் தான் சமூக வலைதள நிலவரத்தை பார்த்து நமக்கும் சொல்லத் தோன்றுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் முடித்ததும் தான் முடித்தார் அதற்குப் பிறகிலிருந்தே ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி எதிர் கருத்து வைத்த வண்ணமாகவே உள்ளனர். கருத்து வைக்கும் வரிசையை யார் துவங்கி வைத்திருந்தாலும் நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து தான் சமீபகாலமாக மக்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக வந்து இணைந்தது விசிக கட்சித் தலைவர் திருமாவளவனின் கருத்து.
அட இருங்கப்பா நானும் வந்து என் கருத்தை வரிசையில நிப்பாட்டியே தீருவேன் என்பது போல் பேசி இருக்கிறார் நடிகர் சத்யராஜ். அவர் பெரியாரின் கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் பின்பற்றி வருபவர் ஆவார். தற்போது அவர் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பற்றி எடுத்து வைத்திருக்கும் கருத்து இணையவாசிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தன்னுடைய மாநாட்டில், “திராவிடத்தையும் தேசியத்தையும் நான் பிரித்துப் பார்க்கப் போவதில்லை; இந்த மண்ணுக்கு இரண்டும் இரண்டு கண்கள் போலத்தான்” என்று உரக்கப் பேசினார்.
அந்தக் குறிப்பிட்ட கொள்கைக் கோட்பாட்டுக்கு எதிர் கருத்து வைக்கும் விதத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ” விஷமும், விஷமுறிவு மருந்தும் எப்படி ஒன்றாகாதோ அதேபோல் தான் இந்த திராவிடமும், தமிழ் தேசியமும். இரண்டும் எந்த காலத்திலும் ஒன்றாக முடியாது.
திராவிடம் என்பதே தமிழ் தேசிய இன மக்களை ஆள வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதுதான். ஆனால், மற்ற மொழி இனங்களை போல தமிழ் மொழியும் உயர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்று துடிப்பது தான் தமிழ் தேசியம்.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஐந்து குண்டுகளை தாங்கி இறந்து விழுந்து கிடந்த வேளையில் எந்த சலனமும் இல்லாமல் திராவிடம் பதவியேற்றுக் கொண்டிருந்தது. தமிழ் தேசியமோ அதே நிகழ்வுக்காக வருந்தி துடித்து போனது எனவும் சாடினார்.
திராவிடத்துக்கு உறுதி வார்த்தைகள் மட்டுமே கொடுக்கத் தெரியும் ஆனால் தமிழ் தேசியத்துக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றவும் தெரியும். ஆகையால் இரண்டும் சமமாகவே முடியாது என்று அவர் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
இதற்கிடையில் பல வருடங்களுக்கு முன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கியூபாவுக்கு ஆங்கிலத்தில் எழுதி அனுப்பி வைத்த கடிதத்தை குறித்து நடிகர் சத்யராஜ் பேசியதாவது, ” தமிழர்கள் என்பவர்கள் பண்டைய தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றிக் கொண்டு தமிழை தாய் மொழியாக பேசி வருபவர்கள். அதுமட்டுமின்றி தமிழ் என்பது இந்தியாவில் பேசப்படும் ஒரு தொன்மையான மொழி; திராவிட குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி; இது தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற சில நாடுகளில் பேசப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருப்பதாக சொன்னார்.
ஆகையால் தமிழ் மொழி பேசும் திராவிடர்கள்; திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என்னும் அளவில் தான் பிரபாகரனே பேசியிருக்கிறார் என்று சத்யராஜ் மேடையில் பேசினார்.
இவரது இந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பற்றி தான் இணையவாசிகள் அவரை பலவாறு விமர்சித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இந்த இயக்கம் 1976-இல் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை தமிழீழம் என்ற பெயரில் உருவாக்கி விட வேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒன்றாகும். 1976 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்த இயக்கம் தொடர்ந்து போராடியது. அதன் பிறகு இந்த ஈழப் போர் இலங்கை ராணுவத்தினர் மற்றும் சில நாடுகளின் துணையுடன் 2009-இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இயக்கம் தொடங்கிய ஆரம்ப காலகட்டதில் பிரபாகரன் அவர்களுக்கு அப்படி ஒரு கருத்து இருந்ததே தவிர போர்க்காலம் துவங்கி போர் நடைபெற தொடங்கிய பிறகு அவர் தமிழ் தேசியம் எனும் கொள்கையை மட்டுமே பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் 1980களுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் விடுதலை புலிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஆயுதப் பொருட்கள் கிடைக்க தடை செய்தனர். அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
அந்த காலகட்டம் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு திராவிடத்தின் மீதிருந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக இழக்கும்படி செய்திருந்தது. அதன் பிறகு தமிழ் தேசியத்தை மட்டுமே சீறிய கொள்கையாக வைத்துக் கொண்டு அவர் முன்னேறினார் என்பதையெல்லாம் சமூக வலைதளவாசிகள் ஆதங்கத்துடன் சத்யராஜுக்கு எதிராக பதிவுட்டுக் கொண்டிருக்கின்றனர்.