கனமழையினால் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு, 3 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடுகளில் 7 பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தான் இந்த பாறை சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, இவர்களது குழந்தைகள் கவுதம், இனியா மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகன், மகள்கள் தேவிகா, வினோதினி இன்னொரு பெண் என மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய பேரிட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று அதிகாலை முதல் பாறைகள் சரிந்து விழுந்த இடங்களில் மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. அந்த ஏரியாக்களில் பெரும்பாலான இடங்கள் குறுகலான பாதை என்பதால் JCB மாதிரியான கனரக வாகனங்கள் செல்வதற்கான வாய்ப்பு அங்கு பெருமளவும் இல்லை. இதனால் தேசிய பேரிடர் மீட்புப் பணி குழு அங்குள்ள மரங்களை இயந்திரங்களின் மூலம் அறுத்தும், வீட்டின் மேற்கூரைகளை அப்புறப்படுத்தியும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து கரையை கடந்த பின்னரும் சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் கடலூரில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது.
இன்று இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், ஆறுகளில் தண்ணீர் மட்டம் நிரம்பியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருசில பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
அரகண்டநல்லூர், மணம்பூண்டி மற்றும் ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியிருக்கின்றது. இதனால் அந்த இடங்கள் அனைத்தும் ஒரு தனித்தீவு போல் காட்சியளித்து வருகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மாநில பேரிட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வில்லுபுரம் மாவதடத்தில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்துகொண்டு வருகிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். மேலும் அங்குள்ள மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் எம். ஆர். கே. பன்னீர் செல்வம். மேலும் அவரை வீடியோ காலில் தொடர்புகொண்டு வெள்ள பாதிப்புகளை பற்றி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கேட்டு தெரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.