‘ஃபெஞ்சல்’ புயல் நாளை கரையைக் கடக்கிறது!

 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாலையில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று பிற்பகலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் மெதுவாக நகர்வதால் நள்ளிரவு அல்லது நாளை காலையில் தான் புயல் கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

அதையொட்டிய மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீட்டரிலும், அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும்.

நாளை திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று பாலச்சந்திரன் கூறினார்.

 

Comments (0)
Add Comment