தனுஷ்- ஐஷ்வர்யா இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் 27- ஆம் தேதி அன்று விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூன்று முறை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இறுதியாக நவம்பர் 21 அன்று சென்னை நீதிமன்றத்தில் இன்-கேமரா நடவடிக்கைகளுக்காக ஆஜரானார்கள்.
குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முடிவைக் கேட்டார். அவர்கள் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்தனர்.இதையடுத்து நவம்பர் 27ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தம்பதியரின் மகளான ஐஷ்வர்யா, இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான தனுஷை 2004-ஆம் ஆண்டு கரம் பிடித்தார். அவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் திருமண வாழ்வை ஒன்றாய் கழித்த இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருவரை ஒருவர் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.
அவர்களது அறிக்கையில், “18 வருடங்களாக நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என ஒன்றாக இருந்தோம். பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு மற்றும் அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்களின் பாதைகள் இரண்டாக பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யா-தனுஷ் என்னும் தம்பதியாக இருந்த நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து, தனிப்பட்ட நபர்களாக எங்களை நாங்களே புரிந்துகொள்ள விரும்புகிறோம். எங்களது இந்த முடிவை ரசிகர்களும் மக்களும் ஆகிய நீங்கள் மதித்து புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று அவர் அதில் எழுதியிருந்தார்.