நான் சங்கி இல்ல-சொர்க்கவாசல் டிரெய்லர் வெளியீட்டில் ஆர். ஜே. பாலாஜி பேச்சு!

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன்.

படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷ‌யம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.

நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.” என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் – ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று கூறியவர் அடுத்து படத்தை பற்றி பேசினார்.

இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு பெரிய உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி பேசினார்.

ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம், ட்விட்டரில் விமர்சிக்கலாம், இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம் அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை என்று பேசினார்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. “நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்” என்று சில அரசியல் கட்சி விமர்சகர்களை குறிப்பிட்டு அவர் பேசினார்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். “அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என  எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை.  ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் வேலை செய்யாதீர்கள். டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்” என்று ‘கங்குவா’ படத்திற்கு நிகழ்ந்த சம்பவத்தை சூசகமாக மேற்கோள் காட்டி பேசினார்.

29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு படைப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment