‘விஜய் மாறி நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன்.. 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்னேன்’ – சரத்குமார் பெருமிதம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடந்த மார்ச் மாதம் தனது கட்சியை பாஜக-வுடன் இணைத்தபோது பலரும் பலவாறாக கருத்துக்களை கூறியிருந்தனர்.
அதன்பிறகு தற்போது சென்னை பெரியமேட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,”பாஜகவின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்துவது தொடர்பான கூட்டம் இது. பொறுப்புகளை எதிர்பார்த்து நான் பாஜகவில் இணையவில்லை, பொறுப்புகள் வரும்போது என் பொறுப்பு மேலும் அதிகரிக்கும், அரசு மருத்துவரை விக்னேஷ் தாக்கியதை குற்றச்செயலாக தான் நான் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் விக்னேஷ் ஆயுதத்தை எடுத்து மருத்துவரை தாக்கியிருக்க கூடாது” என்று அவர் ஊடகத்தினரிடம் கூறியிருக்கிறார்.
மருத்துவர்களானவர்கள் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு உள்ளவர்கள். இறைவனுக்கு பிறகு மருத்துவர்கள் தான் என்று நான் நம்புகிறேன். சில காலத்துக்கு முன் நான் கீழே விழுந்ததையும், பிறகு கழுத்தில் அடிபட்டதையும் இன்று வரை மறக்கவில்லை. நான் இப்போது எழுந்து நிற்பதற்கும், நடமாடுவாதற்கும் மருத்துவர்கள் தான் காரணம். விக்னேஷின் தாயார் தற்போது வைத்துள்ள கோரிக்கை குறித்து அமைச்சர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிண்டி மருத்துவமனை சம்பவம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் பற்றி கேட்கப்பட்ட கேள்வியில் அவர் கூறியதாவது, “இப்பொழுது தான் துணை முதலமைச்சர் ஆகியிருக்கிறார். துணை முதலமைச்சர் ஏதாவது செய்திருந்தால் அவரது செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். என்ன இலக்கு கொடுத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியாது,கலைஞரின் பேரன்,முதல்வரின் மகனாக இன்று வலம் வந்து கொண்டு இருக்கிறார்,அவர் துணை முதல்வர் ஆகிய பிறகு என்ன செய்திருக்கிறார் என்று சொன்னால் அவரது குறை,நிறைகள் குறித்து சொல்வேன்”.
மேலும், “கொள்கை அடிப்படையில் நான் விமர்சிக்கவும் விரும்பவில்லை,போக போக தான் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்,அவரது கொள்கை என்ன என்று தெரியவரும். அவர் பல கூட்டங்களை செய்ய வேண்டும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து மற்றவர்களை விட இவர் என்ன வித்தியாசமாக திட்டங்கள் வைத்துள்ளார், யாரும் கண்டிராத வகையில் தன்னால் ஆட்சி புரிய முடியும் என்று அழுத்தமாக கூறும் போது தான் அவர் சரியா? தவறா? என்று சொல்ல முடியும். மக்கள் பிரச்சனையை எடுத்துரைத்து விஜய் அரசியல் செய்யணும் என்று நான் நினைக்கிறேன்” என்று பாஜக பிரமுகராக தனது கருத்தை சொல்லியிருக்கிறார்.
“விஜய் கட்சி ஆரம்பித்ததால் தான் மற்ற கட்சிகள் தற்போதே தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்கள்,கல்லடி பட தான் செய்யும்,அதை எவ்வளவு திறமையாக விஜய் கையாள்கிறார் என்பதில் தான் உள்ளது”
“விஜய் கூறியது போல் நானும் உச்ச நடிகராக இருக்கும் போது தான் அரசியலுக்கு வந்தேன். பெரிய பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த நேரத்தில் மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன். மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன்” என்று விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு பேசினார்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை குறித்து தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது குறித்து இப்போது தான் விஜய்க்கு தெரிகிறதா? பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் சிறைப்பிடிப்பு குறைந்துள்ளது,விஜய் தெரிந்துகொண்டு பேச வேண்டும்” என்றார்.
இவ்வாறாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.