கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஏற்கனவே விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து தற்போது அந்த மருத்துவமனை வேறொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
நவம்பர் 14ஆம் தேதி பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்னும் 31 வயது இளைஞர் வயிறு உப்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஒரு நாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அது மட்டுமின்றி அவர் தேவையில்லாமல் அங்கு மிகவும் அலைக்கழிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதனால் தான் இன்று காலை ஒன்பது மணி அளவில் விக்னேஷ் மரணம் அடைந்து விட்டார் என்று அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து புகார் அளித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பாக தற்போது கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
குடல் நோய் தொடர்பான பிரச்சனைக்காக விக்னேஷ் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் விக்னேஷுக்கு அங்கு சிகிச்சை பார்க்க இயலாததால் அவரது உறவினர்கள் அவரை கிண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.
நவம்பர் 14ஆம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசரக் கருவி பொருத்தப்பட்டு விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முறையான சிகிச்சை அளித்தும் கூட ஒரு கட்டத்துக்கு மேல் சிகிச்சை அவரிடத்தில் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் உயிர் இழந்தார் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.