கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது; ஒரு பக்கம் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர் இதய நோயாளி என்பதால் எட்டு மணி நேரத்திற்கு பிறகு அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும். மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் உட்பட இருவரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மருத்துவர் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையுடனே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்கள் தங்களவர்கள் நோயுடன் போராடுகின்றனரே எனும் வேதனை இருக்கலாம். ஆனால் அதுவே மருத்துவர்களை தாக்கும் அளவுக்கான நிலைமையை உருவாக்கக் கூடாது என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, “தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார்.
மருத்துவருக்கு ஏற்பட்ட கத்தி குத்து குறித்து எதிர்கட்சித் அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ” உயிர் காக்கும் கடவுள்களான மருத்துவர்கள் மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு பார்ப்பதில்லை. மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசு வேடிக்கை பார்க்க கூடாது” என்று தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இதுபோக மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவர் சங்கம் அறிவிப்பு. அவசர சிகிச்சை தவிர்த்து மற்ற சிகிச்சைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் அரசு மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.மற்ற மருத்துவர்களின் வேலை நிறுத்தம் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
இப்படியாக முக்கியமான கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த திடீர் கத்திக்குத்து சம்பவத்தை குறித்து தங்களது தனிப்பட்ட கருத்தை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.