யோகா மாஸ்டரை திருமணம் செய்த ரம்யா பாண்டியன்!

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட ரம்யா பாண்டியன் பஞ்சாபை சேர்ந்த லோவல் தவானை  இன்று ரிஷிகேஷின் கங்கை நதியோரத்தில் மணமுடித்து கரம் பிடித்தார்.  இருவரது குடும்பத்தினர்,  உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள்  ஆகியோர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரம்யா பாண்டியன் என்று சொன்னாலே  நமக்கு நினைவில் வருவது அந்த மொட்டை மாடி போட்டோ சூட் தான். 2019 காலகட்டத்தில் அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி நின்று எதார்த்தமாக எடுத்த சில  ஃபோட்டோக்கள்  இன்டர்நெட்டில் வைரலானதை  தொடர்ந்து தான் அவர் மக்கள் மத்தியில் பரீட்சயமானார்.

அதைத்தொடர்ந்து அவர்  தனது ரசிகர்கள் விரும்பும்படியான  புகைப்படங்கள் பலவற்றை  அவ்வப்போது பகிர்ந்து வந்து கொண்டிருந்தார். ஃபோட்டோ ஷூட்டுகளுக்கென்று பெரிய பொருட்செலவென எதுவும் இல்லாமலே அவர் தனக்கான அடையாளத்தை  இணையவாசிகளிடம்  நிலை நிறுத்தி இருந்தார்.

இதுமட்டுமில்லாமல் அவர் பல தமிழ் திரைப்படங்களில்  நடித்திருக்கிறார்.  ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களின் மூலம்  நடிகையாக அவர் ஒரு நல்ல பெயரும் சம்பாதித்து வைத்திருந்தார். அதில்  ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜோக்கர் படம் இரண்டு தேசிய விருதுகளை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கு கொண்டு  தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.  புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரின் காம்பினேஷன் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.  அதன் பிறகு அவருக்கு கலக்கப்போவது யார்  நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

2020-இல்  விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான நிகழ்ச்சி என்று கருதப்படும் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டு பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானார். தற்போது ரம்யா பாண்டியன் இடும்பன் காரி என்ற திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த மாதம்  தகவல் வெளியானதை தொடர்ந்து  இந்த வருட தீபாவளியன்று  அவர் தனது காதலனான லோவல் தவானுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

பெங்களூரில் யோகா பயிற்சிக்காக சென்றிருந்த இடத்தில் அங்கு யோகா மாஸ்டராக இருந்த லோவல் தவானுடன்  அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது.

இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த  இவர்களது திருமண புகைப்படங்கள்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் அனைவரும்  அவருக்கு வாழ்த்துகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றனர்.  இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு  வருகின்ற நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் வைத்து நடக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.‌

Comments (0)
Add Comment